Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 12 செப்டம்பர் (ஹி.ச.)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரை முதல் 3 பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு வகித்தார்.
அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
ஆனால், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சில போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முதல் 3 பேட்டிங் வரிசை குறித்து ரஹானே கூறுகையில், “உலகக் கோப்பையில் விளையாடிய அதே முதல் 3 பேட்டர்களே மீண்டும் களமிறங்க வேண்டும். சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். 2 அல்லது 3 மோசமான இன்னிங்ஸ்களுக்காக அவரை அணியில் இருந்து நீக்கியது சரியல்ல.
அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அவருக்கான நேரமும் வரும்.
ஆனால் தற்போதைக்கு உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரே முதல் 3 பேட்டிங் வரிசையில் இடம் பெற வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA