Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 13 செப்டம்பர் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வதால், அவர்களின் பாதுகாப்புக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் நவீன தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையின்போது திருமலை மாட வீதிகளில் சுமார் 3½ லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கூட்ட நெரிசலை கண்காணித்து கட்டுப்படுத்தவும், அவசர நேரங்களில் தகவல் தொடர்பு தடையின்றி நடைபெறவும் சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜியோ நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக ‘நெட்வொர்க் வித்-இன் தி நெட்வொர்க்’ என்ற நெட்வொர்க் ஸ்லைசிங் தொழில்நுட்பம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக 30 நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 முக்கிய துணை கட்டுப்பாட்டு மையங்களில் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இந்த சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், பக்தர்கள் அமரும் கேலரிகளில் கூட்ட நெரிசலை கண்காணிக்க முதன்முறையாக சுமார் 200 ஏ.ஐ. அடிப்படையிலான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மூலம் ஒவ்வொரு கேலரியிலும் உள்ள பக்தர்களின் எண்ணிக்கை நிகழ்நேரத்தில் கணக்கிடப்படும்.
ஒரு கேலரி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிரம்பினால், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பக்தர்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படுவார்கள்.
கேலரிகளில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் வெளியேறும்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை தவிர்க்க, திசை வாரியான புதிய வெளியேறும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
எந்த மாட வீதியில் பக்தர்கள் இருக்கிறார்களோ, அந்த திசையிலேயே அவர்கள் வெளியேறும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்கு மாட வீதியில் உள்ள பக்தர்களுக்காக எஸ்-3 கேட் அருகே சிறப்பு ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் அரசு பஸ்களில் நேரடியாக திருப்பதி அல்லது திருமலை பஸ் நிலையங்களுக்கு செல்லலாம்.
திருமலை முழுவதும் சுமார் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அலிபிரி சோதனைச்சாவடி மற்றும் நடைபாதைகளில் முக அடையாளம் காணும் கேமராக்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்டை தானாக பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விஜிலென்ஸ் மற்றும் போலீசார் உள்பட சுமார் 5,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திருமலையில் 4,600 வாகனங்களுக்கு மட்டுமே பார்க்கிங் வசதி இருப்பதால், அதற்கு மேல் வரும் வாகனங்கள் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள 7 மாற்று பார்க்கிங் பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA