Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை அருகே அரையபுரம் கிராமம் இராயர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பர்வதமலை வடக்கு முக வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் புனரமைக்கப்பட்டு, யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் முழங்க இரண்டு கால யாக பூஜைகளை நடத்தினர்.
இன்று நடைபெற்ற இரண்டாம் கால பூஜை நிறைவடைந்ததும் பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து, வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
கோவில் கோபுர கலசங்களை சென்றடைந்ததும், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றினர். இதையடுத்து ஸ்ரீ பர்வதமலை வடக்கு முக வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டபோது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என பக்தி முழக்கமிட்டு வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam