Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.)
பெருந்தலைவர் காமராஜர் பெயரிலான காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவதை வரவேற்பதாகவும், அதற்கான நிதித் திட்டமிடல் இல்லாமல் தவெக அரசு செயல்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான விளம்பரப் பலகை, சமையலறைச் சீரமைப்பு, மாணவர்களுக்கான தட்டு, டம்ளர் உள்ளிட்ட ஆரம்பச் செலவுகளை தலைமை ஆசிரியர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சுற்றறிக்கை மூலம் அழுத்தம் கொடுப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
முதல்வர் அலுவலகத்தைத் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ரூ.6 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கத் தயங்குவது ஏன் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆட்சி மேலிடத்தின் சுய விளம்பரங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் நிதியை வாரி வழங்கும் அரசு, கல்வி நிலையங்களின் அடிப்படை உள்கட்டமைப்புக்குக்கூட நிதி ஒதுக்காமல் ஆசிரியர்கள் மீது செலவைச் சுமத்துவது என்ன மாதிரியான நிதி மேலாண்மை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆசிரியர்கள் கல்வி புகட்டும் வழிகாட்டிகளே தவிர, அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நிதி அமைப்புகள் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தலைமை ஆசிரியர்களைச் சொந்த நிதியைச் செலவழிக்க நிர்ப்பந்திக்கும் உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காலை உணவுத் திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கான முழு நிதியையும் அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கி, ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P