மத்திய பிரதேச கிராமங்களில் கள்ளச்சாராயம் புழக்கம் - விரிவான விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங் வலியுறுத்தல்
சாகர், 13 செப்டம்பர் (ஹி.ச.) மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
மத்திய பிரதேச கிராமங்களில் கள்ளச்சாராயம் புழக்கம் - விரிவான விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங் வலியுறுத்தல்


சாகர், 13 செப்டம்பர் (ஹி.ச.)

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பேசியபோது, அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த கிராமங்களிலேயே மதுவை வாங்கியுள்ளனர்.

இத்தகைய மது கிராமத்தை எப்படி வந்தடைந்தது? அது உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் வந்ததா அல்லது உற்பத்தியாளர்களே நேரடியாக விநியோகித்தார்களா? இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்.

முதலாவதாக, இந்த வழக்குகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலையும் வேறுபட்டது.

இந்த விவகாரத்தில் யார் யார் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த உதவி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், இது எங்களின் தீவிரமான கோரிக்கை, ஏனெனில் சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர், குடும்பத்தின் ஒரே சம்பாத்தியம் செய்பவர் இல்லாமல் போய்விட்டார்.

இதற்கிடையில் சந்து ராஜா, யஷ்வந்த் தாக்கூர் போன்ற நபர்கள் இன்னும் பிடிபடவில்லை. புல்டோசர் நடவடிக்கை பற்றி பேசப்பட்டது, ஆனால் அது வெறும் கண்துடைப்பா? வீட்டின் முன்பகுதியை மட்டும் இடித்தார்களா?.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் மீது சாகர் மாவட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மூன்று குற்றவாளிகளுடன் தொடர்புடைய ஐந்து சட்டவிரோத கட்டுமானங்களை அரசு நிலத்தில் இருந்து அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b