Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 13 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல்லில் வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான ஒரு கட்டு வாழை இலை தற்போது ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.
திண்டுக்கல் வாழை இலை சந்தைக்கு சிறுமலை, ஆடலூர், தாண்டிக்குடி, பன்றிமலை, வெள்ளோடு, நரசிங்கபுரம், ஆத்தூர், நிலக்கோட்டை, அகரம், சின்னாளப்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழை இலைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கிருந்து உணவகங்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் வாழை இலைகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் வரை சுமார் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையானது.
திருமணம், காதுகுத்து, கோவில் திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து வந்தது.
இந்நிலையில், கடும் வெயில் மற்றும் சூறைக்காற்று காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதுடன், இலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சந்தைக்கு வரும் வாழை இலைகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், கடுமையான வறட்சி, விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது ஒரு கட்டு வாழை இலை ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
ஒரு வாழை இலை சுமார் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் வாழை இலைகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam