மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவு – அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 13 செப்டம்பர் (ஹி.ச.) அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவாகவே உள்ளது என்றும், வேறு மாநிலங்களில் 8 முதல் 9 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதே முதலமைச்சரின் எண்ணம்
செங்கோட்டையன்


ஈரோடு, 13 செப்டம்பர் (ஹி.ச.)

அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவாகவே உள்ளது என்றும், வேறு மாநிலங்களில் 8 முதல் 9 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதே முதலமைச்சரின் எண்ணம் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் கியா நிறுவனத்தின் புதிய கார் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மின்வெட்டை குறைப்பதற்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

காற்றாலை மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது 50 மெகாவாட் கூட மின்சாரம் கிடைக்காத நிலை உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தியை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், இரவு நேரங்களில் சூரிய ஒளி இல்லாததால் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைத்து இரவு நேரங்களில் பயன்படுத்துவது குறித்து முதலமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.

மாநிலத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கு தேவையான இடம் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam