Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய கருத்தைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய ஆ.ராசா, ஒரு அமைச்சர் குறித்து பேசிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவரும் கூட அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழியின் எக்ஸ் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று திருக்குறள் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள குறள்,
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
இதன் பொருள், ஒருவர் எதைக் காத்தாலும் காக்காவிட்டாலும் தன் நாவைக் காக்க வேண்டும், இல்லையேல் சொற்குற்றத்தில் சிக்கி துன்பப்பட நேரிடும் என்பதாகும்.
கனிமொழி எந்தவொரு பெயரையும் குறிப்பிடாமல், நேரடியாக விமர்சிக்காமல், இந்த திருக்குறளை மட்டும் பதிவிட்டுள்ளார்.
இது கட்சியினருக்கும், குறிப்பாக ஆ.ராசாவுக்கும் மறைமுகமாக நாவடக்கம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அவர் விடுத்துள்ள அறிவுரையாகவே பார்க்கப்படுகிறது.
திமுகவில் ஏற்கனவே மேடைப் பேச்சுக்கள் சர்ச்சையாவது தொடர்கதையாகி வரும் நிலையில், கனிமொழியின் இந்த நாகரிகமான, அதே நேரத்தில் அழுத்தமான குறள் பதிவு, கட்சிக்குள் சுயக்கட்டுப்பாட்டை வலியுறுத்தும் முயற்சியாக அரசியல் நோக்கர்களால் விவாதிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b