Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 13 செப்டம்பர் (ஹி.ச.)
காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்’ நடவடிக்கையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இலங்கை நாட்டவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.6.08 கோடி மதிப்பிலான 7.605 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 12.14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வினய் குமார் கட்ஜ், ஐ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற முதல் நடவடிக்கையில், காரைக்கால்மேட்டைச் சேர்ந்த நிஜந்தன் என்பவர் 1.438 கிலோ மெத்தாம்பெட்டமைனுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷிடம் இருந்து 6.137 கிலோவும், காரைக்கால்மேட்டைச் சேர்ந்த பாக்கியராஜிடம் இருந்து 30 கிராம் மெத்தாம்பெட்டமைனும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாக்கியராஜின் கூட்டாளியான இலங்கை நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட் ஜெரமியும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையில் மொத்தம் 7.605 கிலோ மெத்தாம்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து கீழவாஞ்சூர் பேருந்து நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் 10.84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கோட்டுச்சேரியில் நடத்தப்பட்ட சோதனையில் 248 சிறிய பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இந்த வழக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சுமார் 30 நாட்களாக, 6 காவல் குழுக்களைச் சேர்ந்த 25 காவலர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 100 அழைப்பு விவரப் பதிவுகள், இணைய நெறிமுறை தரவு மற்றும் சந்தாதாரர் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 112 அல்லது 1933 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam