வேலைக்கு வராமல் சம்பளம் பெற்ற எம்.எல்.ஏ. மருமகள் - விசாரணைக்கு உத்தரவு
பாகல்கோட்டை , 13 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் மேட்டியின் மருமகள் டாக்டர் அங்கிதா. இவர், பாகல்கோட்டை வாம்பே காலனியில் செயல்பட்டு வரும் ‘நம்ம கிளினிக்’ அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக கடந்த 2025-ம்
A


பாகல்கோட்டை , 13 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் மேட்டியின் மருமகள் டாக்டர் அங்கிதா. இவர், பாகல்கோட்டை வாம்பே காலனியில் செயல்பட்டு வரும் ‘நம்ம கிளினிக்’ அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக கடந்த 2025-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பாகல்கோட்டையில் உள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மேற்படிப்பில் அங்கிதா சேர்ந்துள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கிய நிலையில், அரசு கிளினிக்கில் பணிக்கு செல்லாமல் கல்லூரியில் முழுநேர மாணவியாக படித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பணிக்கு வராமலேயே மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் அரசு சம்பளமாக பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முழுநேர எம்.டி. படிப்பில் சேர்ந்து படிக்கும் ஒருவர், அதே நேரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி சம்பளம் பெறுவது விதிமுறைகளுக்கு எதிரானது என கூறப்படுகிறது.

சுகாதாரத்துறையின் கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தபோது இந்த விவகாரம் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ அதிகாரி பணிக்கு வராததால், காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்பட வேண்டிய வாம்பே காலனி ‘நம்ம கிளினிக்’ பூட்டியே கிடப்பதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவ சேவையை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அங்கிதாவின் தந்தையும் மாவட்ட சுகாதார அதிகாரியுமான டாக்டர் ராஜ்குமார், அவரது நியமனம் முந்தைய அதிகாரியின் காலத்தில் நடைபெற்றது என்றும், தற்போது அங்கிதாவின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாலுகா சுகாதார அதிகாரி சரஸ்வதி கூறுகையில்,

அங்கிதா எம்.டி. படித்து வருவது குறித்து தனக்கு தெரியாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முறைகேடு நடைபெற்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA