தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேசுக்கு 3-வது திருமணம்
கொச்சி , 13 செப்டம்பர் (ஹி.ச.) கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சியில் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள்
A


கொச்சி , 13 செப்டம்பர் (ஹி.ச.)

கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சியில் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், தங்க கடத்தல் வழக்கில் கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஸ்வப்னா சுரேசுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொண்டவர் யார் என்பதை ஸ்வப்னா சுரேஷ் தனது பதிவில் தெரிவிக்கவில்லை. எனினும், தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.எஸ்.சரித்தை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2000-ம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் 2011-ம் ஆண்டு ஜெய்சங்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவரையும் பின்னர் விவாகரத்து செய்தார்.

தற்போது அவர் 3-வது திருமணம் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA