சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
கிருஷ்ணகிரி, 13 செப்டம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர்
விபத்து


கிருஷ்ணகிரி, 13 செப்டம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர் விடுமுறை மற்றும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கிருஷ்ணகிரி வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காவேரிப்பட்டினம் அடுத்த சந்தாபுதம் பகுதியில் சென்றபோது, காரின் பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரின் பின்புறத்தில் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசைக்கு சென்று, அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவே நின்றது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் மற்றும் கண்டெய்னர் லாரி இரண்டும் சாலையின் நடுவே நின்றதால், காலை 7.30 மணி முதல் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam