Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 13 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை பகுதியில் உள்ள கோவிலில் இருந்த முருகன் சிலை திடீரென மாயமானதாக கூறப்பட்டது.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிலையை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெருக்கரணை அருகே உள்ள பாழடைந்த கல்குவாரி பகுதியில் முருகன் சிலை இருப்பது கண்டறியப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு சென்ற காவல்துறையினர் சிலையை மீட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் முதற்கட்டமாக கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் சிலை எவ்வாறு கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது, சிலையை கல்குவாரி பகுதிக்கு கொண்டு சென்றதற்கான காரணம் என்ன, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிலை மாயமான சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? சிலையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா? இந்த சம்பவத்தில் மேலும் யாரெல்லாம் தொடர்புடையவர்கள்? என்பது குறித்தும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகன் சிலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அது கோவிலில் இருந்து எப்போது, எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டது என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் காவல்துறை விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P