கொடைக்கானலில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) கொடைக்கானல் அருகே நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி இயங்கி வருவதாகவும், அங்கு அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தி
Nainar


Bb


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

கொடைக்கானல் அருகே நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி இயங்கி வருவதாகவும், அங்கு அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நாயுடுபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்தாக கூறப்படும் கல்குவாரிக்கு தமிழக பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் மதன் நேரடியாக சென்று, அங்கு நடைபெறும் பணிகளை படம் பிடித்துக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலைப்பகுதிகளை சட்டவிரோதமாக துண்டு துண்டாக வெட்டி பாறைகளை எடுப்பது எதிர்காலத்தில் கடுமையான நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் எனவும், இந்த விவகாரத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ன் அடிப்படையில் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் கல்குவாரிகள் அமைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருக்கும்போது, நாயுடுபுரம் பகுதியில் குறிப்பிட்ட கல்குவாரி எந்த அடிப்படையில் இயங்கி வருகிறது என்றும், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உள்ளிட்ட உரிய அரசு சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்து கல்குவாரிக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானல் பகுதியில் செயல்படுவதாக கூறப்படும் இந்த கல்குவாரி குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகி டாக்டர் மதன் இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், அதன்பிறகும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கல்குவாரியின் பின்னணியில் ஏதேனும் அரசியல் தலையீடு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய ஆதாரங்களுடன் உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனவும், பாஜக சார்பில் வலியுறுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ