Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கான 4,724 காலிப் பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 4.75 லட்சம் செவிலியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவோருக்கு எதிர்காலத்தில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படும் என்றும், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சேவையின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, தற்காலிக பணி நியமன உத்தரவை திரும்பப் பெற்று, அனைத்து பணியாளர்களையும் நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வலியுறுத்தி வரும் 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam