திருநெல்வேலி ரயில் நிலையத்தில் 54 கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உட்பட இருவர் கைது
நெல்லை, 13 செப்டம்பர் (ஹி.ச.) ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ரயில் மூலம் சுமார் 54 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாகக் கூறப்படும் பெண் உட்பட இருவரை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர
Arres


நெல்லை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ரயில் மூலம் சுமார் 54 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாகக் கூறப்படும் பெண் உட்பட இருவரை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மேலும், கஞ்சாவை அனுப்பி வைத்தவர்கள் மற்றும் அதனை பெற்றுக்கொள்ள இருந்தவர்கள் என மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ரயிலில் ஆண், பெண் இருவர் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரின் நடமாட்டத்தையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே, அவர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா நோக்கி பயணித்துள்ளனர்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று சூட்கேஸ்களை சோதனை செய்தபோது, அதில் சுமார் 54 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்ததாகக் கூறப்படும் ஆண் மற்றும் பெண் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த உர்மிளா சாஹூ மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சர்தார் பிஸ்வாஸ் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இருவரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஒடிசாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கஞ்சாவை கொண்டு செல்வதற்காக கைது செய்யப்பட்ட இருவரும் இடைத்தரகர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கஞ்சாவை இவர்களிடம் கொடுத்து அனுப்பியவர்கள் மற்றும் எர்ணாகுளத்தில் கஞ்சாவை பெற்றுக்கொள்ள இருந்த நபர் உள்ளிட்ட மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து சுமார் 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ