Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தணிக்கை வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 4,900 ஆம்னி பேருந்துகள் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களில் இருந்து மேலும் சுமார் 1,000 ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்படுகின்றன.
பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுவதுடன், சுமார் ஒரு லட்சம் பயணிகள் அவற்றில் பயணம் செய்கின்றனர்.
பண்டிகை காலங்களில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்துகள் முறையாகவும், நடைமுறையில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 639 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிமீறல்களுக்காக ரூ.14.39 லட்சம் இணக்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளிடம் இருந்து தமிழகத்திற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.27.58 லட்சமும், அபராதமாக ரூ.3.19 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 நாட்களில் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.30.77 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை பேருந்து உரிமையாளர் ரத்து செய்தால், சம்பந்தப்பட்ட பயணிகள் மாற்றுப் பேருந்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பேருந்துகளின் அனுமதிச்சான்று ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
வரும் நாட்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பெறப்பட்டால், அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P