பழனி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் – 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திண்டுக்கல், 13 செப்டம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சுபமுகூர்த்த நாள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே க
Palani Murugan Temple


திண்டுக்கல், 13 செப்டம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சுபமுகூர்த்த நாள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.

சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள், தங்களது உறவினர்களுடன் புத்தாடை அணிந்து மலைக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், தீர்த்தக்காவடி சுமந்தும் கிரிவீதியில் ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர் விடுமுறையால் பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், பழனி மலைக்கோயிலின் ரோப்கார் சேவை இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், மின் இழுவை ரயிலான வின்ச் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. இதனால் வின்ச் மூலம் மலைக்குச் செல்ல பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் குடமுழுக்கு நினைவு மண்டபம் வழியாக ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டு, பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு மலைக்கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருந்தது.

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போலீசார் மற்றும் கோயில் பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.

தொடர் விடுமுறை காரணமாக பழனி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN