Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் மற்றும் பழ சந்தையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பண்டிகை கால தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு மலர் சந்தையில் விநாயகர் வழிபாட்டுக்கு மிக முக்கியமான மல்லிகை பூவின் விலை கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் சாமந்தி பூ கிலோ 300 ரூபாய்க்கும், ரோஜா பூ கிலோ 260 ரூபாய்க்கும், வாசனை மிகுந்த பன்னீர் ரோஜா கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகருக்கு உகந்ததாக கருதப்படும் அருகம்புல் ஒரு கட்டு 50 ரூபாய்க்கும், எருக்கம் பூ மாலை 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் தோரணம் கட்டுவதற்கான மாவிலை தோரணம் ஒன்று 20 ரூபாய் என விற்பனையாகிறது.
இது மட்டுமின்றி பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. பூஜைக்கு தேவையான மாதுளை பழம் கிலோ 150 ரூபாய்க்கும், ஆப்பிள் பழம் தரத்திற்கு ஏற்ப கிலோ 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும், சாத்துக்குடி கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு முக்கியமாக தேவைப்படும் விளாம் பழத்தின் விலை மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் வரத்து அதிகரித்திருந்தாலும் தேவையைப் பொறுத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. 20 எண்ணிக்கையிலான கரும்பு கட்டுகள் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வாழைக்கன்று, அருகம்புல், எருக்கம்பூ மாலை இவற்றின் விலையும் வழக்கமான நாட்களை விட 30% முதல் 50% வரை உயர்ந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b