தெற்கு ரயில்வே தொழில் பழகுனர் நியமனம்,தமிழர்களின் வாய்ப்புகளை பறிக்க சதி - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.) தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழக இளைஞர்
அன்புமணி


தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்க முயற்சி நடைபெறுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை உள்ளிட்ட இடங்களில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இடங்களுக்கு வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான விதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரயில்வே வாரியத்தின் 22.07.2002 தேதியிட்ட சுற்றறிக்கை மற்றும் 05.05.1984 தேதியிட்ட தொழில் பழகுனர் தேர்வு வழிகாட்டி விதிகளின்படி, பணியிடங்களில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தெற்கு ரயில்வேயில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு விதிகள் மாற்றப்பட்டு, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள தொழில் பழகுனர் நியமன அறிவிக்கையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாகவும், தட்சிண கன்னடா, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர், கேரளா, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் வாய்ப்புகள் பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக தெற்கு ரயில்வேயில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த உரிமைக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தமிழக இளைஞர்களின் தொழில் பழகுனர் வாய்ப்புகளைப் பறிக்கும் நோக்கம் கொண்ட இந்த அறிவிக்கையை தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியைச் சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்றும், இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P