Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்ததாக கரூர் மக்களவைத் தொகுதி தலைவர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தூய்மைப் பணியாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் சலுகைகள் அல்ல என்றும், நியாயமான ஊதியம், சட்டப்பூர்வ உரிமைகள், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் கண்ணியமான பணிநிலை ஆகியவற்றுக்கான அடிப்படை கோரிக்கைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தால் தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.760 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.520 மட்டுமே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன் விளக்கமளித்து, சட்டப்படி உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வாராந்திர விடுமுறை எடுத்துக்கொள்ளும் தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகக் கூறப்படும் புகாரை விசாரித்து, சட்டப்படி கிடைக்க வேண்டிய ஊதியத்துடன் கூடிய வார விடுமுறையை முறையாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குப்பை சேகரிக்கும் வாகனங்களின் பழுதுபார்ப்பு, டீசல் உள்ளிட்ட செலவுகள் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், தொழிலாளர்களின் ஊதியத்தில் சட்டவிரோத பிடித்தங்கள் எதுவும் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமும் சுகாதாரத்துக்கும் தொற்றுநோய்களுக்கும் ஆபத்தான கழிவுகளுடன் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைத் தடையின்றி வழங்க வேண்டும் என்றும், ESI, PF உள்ளிட்ட சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு உரிமைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்துடனான முழுமையான ஒப்பந்த ஆவணங்களையும், தொழிலாளர்களின் பெயரில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள ESI உள்ளிட்ட சட்டப்பூர்வ பங்களிப்புகளின் முழு விவரங்களையும் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தாலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசின் பொறுப்பு குறையாது என்று குறிப்பிட்டுள்ள ஜோதிமணி, ஒப்பந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவும் முறையாகவும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்ல என்றும், நகரங்களின் சுகாதாரத்தைத் தங்கள் உழைப்பால் தாங்கி நிற்கும் அத்தியாவசியப் பணியாளர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் உழைப்புக்கு உரிய ஊதியம், பாதுகாப்பு, சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், கரூரில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசு உடனடியாக நியாயமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, ESI, PF, வார விடுமுறை உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்ய ஒருங்கிணைந்த மாநில அளவிலான கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P