Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 13 செப்டம்பர் (ஹி.ச.)
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு தூய்மைப் பணிகளுக்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த நிறுவனம் மூலம் வழங்கப்படும் ஊதியத்தை முறையாகவும், காலதாமதமின்றியும் வழங்க வேண்டும், பண்டிகை கால ஊக்கத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக இன்றும் மருத்துவமனை வளாகத்தின் முன்பு ஒன்று திரண்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பணிகளைப் புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனையின் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
எனினும், தங்களது கோரிக்கைகளுக்கு உறுதியான உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b