Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 13 செப்டம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் போலீசார் கடந்த ஒரு மாத காலமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி காரைக்காலில் இருந்து இலங்கைக்கு மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காரைக்கால் போலீசார், இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 7.60 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இலங்கைக்கு கடத்துவதற்கான திட்டத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காரைக்கால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ