சென்னையிலிருந்து திருமலைக்கு புறப்பட்டது புனித திருக்குடை ஊர்வலம்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பூக்கடை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சென்ன கேசவ பெருமாள் திருக்கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று பக்தி பரவசத்துடன் தொடங்கியது. பாரிமுனையில் இருந்து புறப்பட்ட இந்த புனித ஊர்வலம், பைராகி மட
சென்னையிலிருந்து திருமலைக்கு புறப்பட்டது புனித திருக்குடை ஊர்வலம்


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சென்ன கேசவ பெருமாள் திருக்கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று பக்தி பரவசத்துடன் தொடங்கியது. பாரிமுனையில் இருந்து புறப்பட்ட இந்த புனித ஊர்வலம், பைராகி மடம் மற்றும் வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை நேரத்தில் கவுனி பகுதியை கடந்து செல்கிறது.

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆன்மிக சேவையின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக 11 புனித வெண்பட்டு திருக்குடைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவைக்காக இந்த குடைகள் சமர்ப்பிக்கப்படுவது பல ஆண்டுகளாக தொடரும் மரபாகும்.

சென்னையிலிருந்து பாதயாத்திரையாக கொண்டு செல்லப்படும் இந்த திருக்குடைகள், வரும் செப்டம்பர் 18-ம் தேதி திருமலை மாட வீதிகளில் பக்தர்கள் புடைசூழ வலம் வந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது. ஊர்வலம் செல்லும் வழியெங்கும் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b