Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
சமூக வலைதளங்களில் தனது பதிவுகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும், தொடர்ந்து பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருவதாகவும் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தங்களது சமூக வலைதள பதிவுகள் மிகக் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே சென்றடைவதாகவும், சிலருக்கு 5 முதல் 6 நாட்கள் கழித்தே பதிவுகள் செய்திகளாகக் காட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பலருக்கு தங்களது முகநூல் மற்றும் எக்ஸ் பதிவுகள் காட்டப்படுவதே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது முகநூல் மற்றும் எக்ஸ் கணக்குகள் மட்டுப்படுத்தப்படுவது புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதாகவும் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
காரணமின்றி பதிவுகள் நீக்கப்படுவதும், கணக்குகள் தடை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் ஈகி சிவா திலீபன் இறுதி நிகழ்வு தொடர்பாக தான் வெளியிட்ட பதிவு, பயங்கரவாத அமைப்பு குறித்த செய்தி எனக் கூறி காரணமின்றி நீக்கப்பட்டதாகவும், இதேபோன்ற நடவடிக்கைகள் எக்ஸ் தளத்திலும் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது முகநூல் கணக்குகள் 5 முறையும், எக்ஸ் கணக்கு 5 முறையும் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 200 போராட்டங்கள், நிகழ்வுகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகளில் தான் பங்கேற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே17 இயக்கம் சார்பில் ஆண்டுக்கு சுமார் 50 நிகழ்வுகள் நடத்தப்படுவதாகவும், மாநாடு, கருத்தரங்கு, போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும், தற்போது தவெக ஆட்சியிலும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆனால், தங்களது போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பெரும்பாலும் ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதில்லை என்றும், யூட்யூப் ஊடகங்களிலும் அரிதாகவே பதிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த 6 முதல் 8 ஆண்டுகளாக சமூக வலைதளங்களையே பிரதான தகவல் பரப்பும் தளமாக பயன்படுத்தி வருவதாகவும், தற்போது அந்த தளங்களிலும் தங்களது பதிவுகள் சில ஆயிரம் பேரை மட்டுமே சென்றடையும் வகையில் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தங்களது 3 யூட்யூப் சேனல்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதே ஒரு சேனல் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மே17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் மற்றும் யூட்யூப் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், ஜிமெயில் கணக்கும் முடக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைக்கப்படுவதும் கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தந்தி, புதிய தலைமுறை, நியூஸ் 7, நியூஸ் 18 உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விவாதங்களுக்கு அழைக்கப்பட்டு வந்ததாகவும், தந்தி தொலைக்காட்சியில் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு தன்னை அழைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பிய பின்னர், போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பாண்டே செய்தி வெளியிட்டதே கடைசி நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாலைமுரசு தொலைக்காட்சி கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே தன்னை விவாதத்திற்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2026 மார்ச் மாதத்தில் நடைபெற்ற இந்தி அழிப்பு போராட்டம் குறித்தோ, மொழிப்போர் ஈகி சிவா திலீபன் குறித்தோ உரிய அளவில் செய்தியாக்கப்படவில்லை என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று, ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக பங்கேற்ற சிவா திலீபன் இறுதி நிகழ்வை பல தொலைக்காட்சிகள் படம்பிடித்த போதிலும், அது செய்தியாக்கப்படாமல் முடக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் சில யூட்யூபர்கள் மே17 இயக்கம் தொடர்பான செய்திகளை தவிர்த்ததுடன், இயக்கத்தைப் பற்றி அவதூறு செய்திகளை பரப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்துத்துவ சேனல்கள் மற்றும் நாதக, அதிமுக, பாஜகவைச் சேர்ந்த ஐடி குழுவினரும் தங்களைப் பற்றி அதிக அளவில் பொய்யான மற்றும் அவதூறான செய்திகளை பரப்பியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மே17 இயக்கம் செயல்படவில்லை என்றும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக மௌனமாகிவிட்டதாகவும் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தவறானவை எனத் தெரிவித்துள்ள அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 56 வழக்குகளையும், திமுக ஆட்சியில் மேலும் 10 முதல் 15 வழக்குகளையும், தற்போதைய தவெக ஆட்சியின் 4 மாதங்களில் ஒன்றிரண்டு வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இத்தனை செய்தி தணிக்கைகளையும் தடைகளையும் கடந்து மே17 இயக்கம் உயிர்ப்புடனும், ஆளும் கட்சிகளுக்கு சார்பின்றியும், சோர்வடையாமலும் தொடர்ந்து இயங்கி வருவதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், வேறு வழியின்றி சமூக வலைதளங்களையே தொடர்ந்து சார்ந்திருக்கும் நிலையில், தங்களது பதிவுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மே17 இயக்கத்தின் பதிவுகள் கண்ணில் பட்டால் அவற்றை பகிர்ந்து, மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும் என்றும், குறிப்பாக மே17 இயக்கம் சோர்ந்து ஓய்ந்துவிடவில்லை என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்களது தோழர்களின் போராட்ட உணர்வை எவ்வகையிலும் எவராலும் தடுத்துவிட முடியாது என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ