நிச்சயம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் - எடப்பாடி பழனிசாமி
திருச்சி, 13 செப்டம்பர் (ஹி.ச.) திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தவெக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களு
Edappadi Palaniswami


திருச்சி, 13 செப்டம்பர் (ஹி.ச.)

திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தவெக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என போராட்டக் களமாக தான் உள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த இரண்டு தொகுதிகளில் மக்கள் வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்தார்கள்.

ஆனால் குதிரை பேரம் நடத்தி, அதற்கு பின்பு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த காரணத்தினால் மட்டுமே தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நிச்சயம் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

தமிழ்நாடு பல்வேறு நிதிநிலை நெருக்கடியில் இருப்பதாக இந்த அரசு ஏற்கனவே வெள்ள அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு ஏற்புடையது அல்ல.

அதிலும் குறிப்பாக அவர்கள் தேர்வு செய்த இடம் மீனவர் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய ஒரு இடம். குடியிருப்புகள் இருக்கக்கூடிய ஒரு இடம். பள்ளிகள் இருக்கக்கூடிய இடம். கடல் அருகே இருக்கக்கூடிய இடம். அதிகமான போக்குவரத்து நெரிசலில் சந்திக்கக் கூடிய ஒரு இடம்.

ஆகையால் அங்கு அமைப்பது ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும் இந்த அரசு வேறொரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என அதிமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவர்களின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முறையான பதில் இல்லை. மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு பதில் இல்லை.

சுமாராக 50 நிமிடத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தோம். ஆனால் முதல்வர் அங்கு இல்லாமல் சென்று விட்டார்.

தமிழ்நாட்டில் திறனற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறது

குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல். அதிலும் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN