வி.சி.க- வை தனிமைப்படுத்த பிரசாரப் போர் நடத்தப்படுகிறது – வி.சி.க ஐடி விங்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தனிமைப்படுத்தவும், கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை சந்தேகத்திற்குரியவராக மாற்றவும் திட்டமிட்டு பிரசாரப் போர் நடத்தப்படுவதாக விசிக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விசிக ஐடி விங
Vck


Gh


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தனிமைப்படுத்தவும், கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை சந்தேகத்திற்குரியவராக மாற்றவும் திட்டமிட்டு பிரசாரப் போர் நடத்தப்படுவதாக விசிக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக விசிக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில்,

ஆர்.எஸ்.எஸ். சிந்தனை, பா.ஜ.க. அதிகார அமைப்பு, பணம் வாங்கிப் பேசும் ஊடகக் குரல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கணக்குகள் என அனைத்தும் ஒரே திசையில் செயல்படுவதாக விமர்சித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாதி ஒழிப்பைப் பேசும்போது சமூக விரோதம் என்றும், அம்பேத்கர் மற்றும் பெரியார் வழியில் சமூக நீதியைப் பேசும்போது பாரம்பரிய விரோதம் என்றும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைச் சுட்டிக்காட்டும்போது இந்து விரோதம் என்றும் முத்திரை குத்தப்படுவதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசிக ஆட்சிப் பதவிக்காக அல்ல, நீதிக்காக நிற்பதை ஏற்க முடியாதவர்கள், கட்சியின் இருப்பே தங்களது பிரித்தாளும் அரசியலுக்குத் தடையாக இருப்பதால் தாக்குதல்களை முன்னெடுப்பதாகவும் விசிக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது.

ஆதாரமற்ற பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் பரப்பி, ஒரே கதையை பல்வேறு தளங்களில் கொண்டு செல்வதாகவும், இதன் மூலம் ஒரு பொய்யை பலமுறை கூறி உண்மையாக்க முயற்சி நடைபெறுவதாகவும் அந்தப் பதிவு விமர்சித்துள்ளது.

எனினும், பொய்யான பிரசாரங்களால் ஒரு இயக்கத்தை முடக்க முடியும் என்றாலும், அதனை அழிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள விசிக ஐடி விங், தாக்குதல்கள் வந்த ஒவ்வொரு முறையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடங்கிப் போகவில்லை என்றும், தொடர்ந்து எதிர்த்து எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொல். திருமாவளவனை தனியாக விடக்கூடாது என்றும், அவர் மீதான தாக்குதல் கட்சி மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமை மீதான தாக்குதல் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வதந்திகளை உடைப்பது, அச்சத்தை உடைப்பது, தலைமையைச் சுற்றிய ஒற்றுமையைப் பாதுகாப்பது மற்றும் சாதி, வெறுப்பு அரசியல் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நிற்பது என ஒவ்வொரு தொண்டரும் பொறுப்பேற்க வேண்டும் என விசிக ஐடி விங் வலியுறுத்தியுள்ளது.

நாங்கள் பின்வாங்க மாட்டோம், மறைந்து போக மாட்டோம், திரும்பி வருவோம் என்ற உறுதியையும் அந்த எக்ஸ் பதிவில் விசிக ஐடி விங் தெரிவித்துள்ளது.

இறுதியாக, தலைவர் தொல். திருமாவளவன் வாழ்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்க, சாதி ஒழிக, சமூக நீதி வெல்க என அந்தப் பதிவு நிறைவடைந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ