Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 13 செப்டம்பர் (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரசலூர் கிராமத்தில்
அரசலூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்றும், வந்தாலும் மிகக் குறைந்த அழுத்தத்தில் வருவதால் தேவையான தண்ணீரை பிடிக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அந்த கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கு செல்லும் மண் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மழைக்காலங்களில் இந்த பாதையில் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அந்த மண் பாதையை தார் சாலையாக மாற்றித் தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஆத்திரமடைந்த அரசலூர் கிராம மக்கள், திடீரென ஒன்று திரண்டு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை மறித்து சிறைபிடித்தனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அரசலூர் - பெரம்பலூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும், ஏரி சாலையை தார் சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
அதிகாரிகளின் உறுதியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
Hindusthan Samachar / vidya.b