சென்னையில் 1,562 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி – 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி சென்னை பெருநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்
Vinayagar


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விழாவையொட்டி சென்னை பெருநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர் முழுவதும் 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் என மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது ரோந்து சென்று கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், 2 தன்னார்வலர்களை பாதுகாவலர்களாக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடு நடத்துமாறும், பொது இடங்களில் உரிய அனுமதியுடன் வைக்கப்படும் சிலைகளை காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழிபாடு நடத்துமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வழிபாடு முடிந்த பின்னர், செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ