Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 13 செப்டம்பர் (ஹி.ச.)
குன்னூர் அருகே உள்ள கோடேரி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள கோடேரி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், அங்குள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த யானைகள் கூட்டம் வனப்பகுதிக்கு திரும்பாமல், அருகில் உள்ள தேயிலை தோட்டங்களிலேயே தொடர்ந்து முகாமிட்டுள்ளது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டத்திற்குள் ஓய்வெடுக்கும் யானைகள், இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவே தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோடேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b