Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 14 செப்டம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் அம்மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இணைந்து உருவாக்கிய புதுமையான திட்டத்தின் கீழ், சிசிடிவி காட்சிகளை நேரடியாக ஆய்வு செய்து போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்டறியும் திறன் கொண்ட AI கேமராக்கள் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாகர்கோவில் பார்வதிபுரம் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து விதிமீறல் கண்டறியும் நவீன கேமரா, நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக செல்வது, சிக்னலை மீறுவது உள்ளிட்ட விதிமீறல்களை துல்லியமாக பதிவு செய்து அபராதம் விதிக்கும் இந்த கேமராவின் செயல்பாட்டை முடக்கும் நோக்கில் இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பார்வதிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். சேதப்படுத்தப்பட்ட கேமராவின் அருகில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி மர்ம
நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் போக்குவரத்து பாதுகாப்புக்காக அரசு பெரும் பொருட்செலவில் அமைத்துள்ள நவீன கருவியை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b