சென்னை திரும்பும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச) வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இன்று முதல் க
Additional buses to operate from Kilambakkam


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச)

வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இன்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர்.

விடுமுறை முடிவடைந்து நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ள நிலையில், இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை சென்னை நோக்கி வரும் பயணிகளின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பயணிகள் சிரமமின்றி சென்னை வந்து சேரும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி வரும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் அதிகமாகும் பட்சத்தில் காத்திருப்பு இல்லாமல் உடனுக்குடன் பேருந்துகளை இயக்க அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிளாம்பாக்கம் வந்து இறங்கும் பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இரவு முழுவதும் இயக்கப்பட உள்ளன.

பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும், பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b