ஆம்பூர் அருகே விநாயகர் கோவிலில் அம்மன் சிலைகள் உடைப்பு
ஆம்பூர், 14 செப்டம்பர் (ஹி.ச.) ஆம்பூர் அடுத்த மாதனூர் எம்.எம்.நகர் பகுதியில் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி மற்றும் பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலில் அமைக்கப்பட
Amm


ஆம்பூர், 14 செப்டம்பர் (ஹி.ச.)

ஆம்பூர் அடுத்த மாதனூர் எம்.எம்.நகர் பகுதியில் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி மற்றும் பொதுமக்கள் வந்துள்ளனர்.

அப்போது கோவிலில் அமைக்கப்பட்டிருந்த நாகலம்மன் மற்றும் வாராகி அம்மன் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அம்மன் சிலைகளை உடைத்ததாக தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் சுரேஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் ஆலயத்தில் இருந்த அம்மன் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல வழக்குகளில் தொடர்புடையவர்

மேலும், கடந்த ஆண்டு இதே நாளில் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மன் சிலைகளை உடைத்ததாக கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மாதனூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை கொலை செய்து, ஆற்காடு பகுதியில் உள்ள ஆற்றில் வைத்து எரித்த வழக்கிலும் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறை சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கிலும் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அம்மன் சிலைகள் உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுரேஷிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ