Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட புதிய மெட்ரோ ரயில்கள் தொடர்ந்து சென்னை வந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை 35 புதிய மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி மெட்ரோ பணிமனைக்கு வந்து சேர்ந்துள்ளன.
சென்னையில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, தலா 3 பெட்டிகள் கொண்ட 138 மெட்ரோ ரயில்கள் 3 தொகுப்புகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
இதில் முதல் தொகுப்பில் மட்டும் 36 மெட்ரோ ரயில்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 35 ரயில்கள் தற்போது பூந்தமல்லி மெட்ரோ பணிமனைக்கு வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள ஒரு ரயிலும் வரும் நாட்களில் பூந்தமல்லி பணிமனைக்கு வந்து சேரும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் முதல் தொகுப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 மெட்ரோ ரயில்களும் விரைவில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வர உள்ளன.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் ரயில்கள்
பூந்தமல்லி மெட்ரோ பணிமனைக்கு ரயில்கள் வந்து சேர்ந்தவுடன் அவை உடனடியாக பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு ரயிலும் பல்வேறு கட்டங்களாக விரிவான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
தனித்தனியாக கொண்டு வரப்படும் ரயில் பெட்டிகள் முதலில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. அதன் பின்னர் ரயிலின் வெளிப்புற கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
தொடர்ந்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, குளிரூட்டும் வசதி, பிரேக் அமைப்பு, ரயில் கட்டுப்பாட்டு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அமைப்புகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதையடுத்து நிலைநிலை சோதனை மற்றும் இயக்கவியல் சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு ரயிலும் இந்த ஆரம்பகட்ட சோதனை நடைமுறைகளை முழுமையாகக் கடந்து செல்ல சுமார் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே ரயில் அடுத்தகட்ட சோதனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சோதனை ஓட்டம்
ஆரம்பகட்ட தொழில்நுட்ப சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ரயில்கள் சோதனைப் பாதையில் இயக்கப்படுகின்றன. முதற்கட்டமாக மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
அதன்பின்னர் உயர்மட்டப் பாதையில் ரயில் இயக்கப்பட்டு, அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டங்கள் பல வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, ரயிலின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளின் செயல்பாடு உறுதி செய்யப்படுகிறது.
மற்ற வழித்தடங்களிலும் இயக்க வாய்ப்பு
இந்த புதிய மெட்ரோ ரயில்கள் முதன்மையாக பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் வழித்தடத்திற்காக வாங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகள் தேவையைப் பொறுத்து சென்னை மெட்ரோவின் பிற வழித்தடங்களிலும் இந்த ரயில்களை பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் ஏற்படும் பயணிகள் வருகை மற்றும் ரயில்களின் இயக்க இடைவெளி ஆகியவை மதிப்பிடப்பட்ட பின்னர், முதல் தொகுப்பில் இருந்து சில புதிய மெட்ரோ ரயில்கள் அந்த வழித்தடத்திலும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ