Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 14 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சி.கொத்தங்குடி பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டை உடைத்து வீசியுள்ளனர். தொடர்ந்து அம்பேத்கர் சிலையை கல்லால் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சிலை முன்பு திரண்டு மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam