Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 14 செப்டம்பர் (ஹி.ச.)
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கருவறை முழுவதும் புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்படுவது தனிச்சிறப்பு வாய்ந்த வழக்கமாக தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் ரூ.15 லட்சம், ரூ.17 லட்சம் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதன் மதிப்பு ரூ.25 லட்சமாக உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது.
விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலவர் ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 என அனைத்து மதிப்பிலான புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களால் கருவறை சுவர் முழுவதும், விநாயகரைச் சுற்றிலும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது.
பண மாலைகளால் ஜொலித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
இது குறித்து ஆலய நிர்வாகக்குழுவினர் கூறுகையில்,
ஆண்டுதோறும் பக்தர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுக்களை பெற்று விநாயகருக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்துவதாகவும், யார் யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது என்ற கணக்கை முறையாக வைத்துக் கொண்டு விழா முடிந்தவுடன் அந்தத் தொகையை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை தரிசிக்க காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டுச் சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b