Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 செப்டம்பர் (ஹி.ச.)
ஈரோட்டில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழாவையொட்டி, பெரியார்–அண்ணா சிலை வரை ஊர்வலம் செல்ல திராவிடர் கழகத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பெரியார்–அண்ணா சிலை வரை ஊர்வலம் நடத்த அனுமதி கோரி திராவிடர் கழக நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்திருந்தனர்.
அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளதால், பெரியார் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காவல்துறையினர், செப்டம்பர் 17-ம் தேதி பெரியார்–அண்ணா சிலை வரை திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்த தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.
ஊர்வலத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும், பெரியார் பிறந்தநாள் ஊர்வலமும் நடைபெற உள்ளதால், இரு ஊர்வலங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam