ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
ஈரோடு, 14 செப்டம்பர் (ஹி.ச.) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ம் தேதி ஆண்டுதோறும் அவரது பிறந்த ஊரான ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார
பெரியார் சிலை


ஈரோடு, 14 செப்டம்பர் (ஹி.ச.)

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ம் தேதி ஆண்டுதோறும் அவரது பிறந்த ஊரான ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி காலை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணி நடத்த திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில், பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் மாலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளதை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காலை நேரத்தில் ஒரு வழித்தடத்திலும், மாலை நேரத்தில் வேறு வழித்தடத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், விநாயகர் ஊர்வலத்தை காரணம் காட்டி பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரியாரிய உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam