விக் அணிந்து 3 போலி அடையாளங்களில் உலா – பங்குச்சந்தை முதலீடு பெயரில் ரூ.30 கோடி மோசடி
மும்பை, 14 செப்டம்பர் (ஹி.ச.) பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 5 சதவீதம் வருமானம் கிடைக்கும் எனக் கூறி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 42 முதலீட்டாளர்களிடம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும் 56 வயது நபரை பொ
பண மோசடி


மும்பை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 5 சதவீதம் வருமானம் கிடைக்கும் எனக் கூறி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 42 முதலீட்டாளர்களிடம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும் 56 வயது நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குஜராத்தில் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த ரோஷன் பூஷண் ஷேத் என்பவர், முதலீட்டாளர்களிடம் போலியான லாபக் கணக்குகள் மற்றும் எக்சல் தாள்களை காண்பித்து நம்ப வைத்ததுடன், ஆரம்பத்தில் சிலருக்கு லாபத் தொகையை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் ரூ.5 கோடி முதலீட்டை பெற்ற அவர், முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரூ.30.26 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2025 டிசம்பர் வரை சுமார் ரூ.3.8 கோடியை லாபமாக வழங்கியதாகக் கூறப்படும் நிலையில், அதன்பின்னர் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்திய அவர், 2026 ஏப்ரலில் தலைமறைவானதாக தெரிகிறது.

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக விக் அணிந்து தனது தோற்றத்தை மாற்றியதுடன், வெவ்வேறு காலகட்டங்களில் ஜெயேஷ் ஹஸ்முக்பாய் ஷா, ராகுல் அதுல்பாய் பரேக், ரோஷன் பூஷண் ஷேத் என மூன்று வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையின் சியோன் மற்றும் மாதுங்கா பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் முதலீட்டாளர்களை சந்தித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஷேத், தலைமறைவான பின்னர் குஜராத் மாநிலம் வல்சாத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தது தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று நாட்கள் கண்காணித்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் போல் வேடமிட்டு குடியிருப்புக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.

மோசடி பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறப்படும் அவரிடமிருந்து பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், மஹிந்திரா தார் உள்ளிட்ட கார்கள், 14 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ரூ.1.67 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.17 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவருக்குச் சொந்தமான 3 குடியிருப்பு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் செப்டம்பர் 1ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 37 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோசடி தொடர்பாக மேலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது விவரங்களுடன் முன்வருமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam