கனமழையால் கவரப்பேட்டை மேம்பாலத்தில் வெள்ளம்- உடையும் அபாயம் என அச்சம்
திருவள்ளூர், 14 செப்டம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த
மழை


திருவள்ளூர், 14 செப்டம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குறிப்பாக, தமிழகத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைக்கும் கவரப்பேட்டை–சத்தியவேடு கூட்டு சாலையின் சர்வீஸ் சாலை மற்றும் மேம்பாலத்தின் மீதும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேம்பாலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் வாகனங்களை திருப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் மேம்பாலத்தின் மீது பழுதடைந்து நின்றன. கனமழையிலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இதனிடையே, வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கும்மிடிப்பூண்டியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam