Enter your Email Address to subscribe to our newsletters

கோரளம், 14 செப்டம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் சைஜு.
இவர் தனது குழந்தைகளான வாசுகி மற்றும் வாசுதேவனுடன் இருசக்கர வாகனத்தில் விதுரா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சைஜு சென்ற இருசக்கர வாகனம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் சைஜு, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் சைஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது இரண்டு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் பொன்முடி பகுதியில் இருந்து சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காரை ஓட்டிச் சென்ற நபரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தக் காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் கார் ஓட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P