சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு
கோவை, 14 செப்டம்பர் (ஹி.ச.) கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி
க


கோவை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில்,

அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளை தவசி மறைத்து வைத்திருந்த இடத்திற்கு, அதை கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை இன்று மாலை அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தவசியை, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

பலமுறை எச்சரித்தும் தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட உடனடி ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / Durai.J