Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது பயணத்தின் நோக்கம் மற்றும் தமிழகத்திற்கு கிடைக்க உள்ள முதலீடுகள் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருக்குறளுக்கு உயரிய அங்கீகாரம் வழங்கி வருவது மத்திய அரசுதான் என்றும், இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று தொழில் முனைவோரை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் வெளிநாடு செல்லவில்லை என எல்.முருகன் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் உண்மையில் தொழில் முனைவோரை சந்திக்கிறாரா, தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கிறாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும் எனக் கூறிய அவர், அரசாங்கத்தின் பிரதிநிதியாக வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் தனது பயணத்தில் யார் யாரை சந்திக்கிறார், தமிழகத்திற்கு என்ன முதலீடுகள் வருகின்றன என்பது குறித்து தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும், ரேஸ் போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தது நல்ல விஷயம் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டதை வரவேற்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
வரவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், திமுக அரசுக்கு ஒரு புறம் ஆதரவு அளித்துக்கொண்டு, மறுபுறம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு இரட்டை நிலைப்பாடு என விமர்சித்தார்.
இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணிகளை மேற்கொள்வோம் என்றும் கூறினார்.
திமுக உடைந்துவிட்டதாக விமர்சித்த எல்.முருகன், பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக இருப்பதாகவும், இடைத்தேர்தலில் கூட்டணியாக இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ