Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவனின் உடல் சடலமாக முட்புதர் குட்டையில் இருந்து கடந்த வாரம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றிட கோரியும் , சிபிசிஐடி விசாரணை நடத்த கோரியும், தமிழ்செல்வன் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய கோரியும் தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மாணவன் உயிரிழந்து 9 நாட்களாகியும் உடலை வாங்க மறுக்கும் தாயார் - மாணவனின் உயிரிழப்பு தொடர்பாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டபோதும் காவல்துறை விசாரணையில் குழப்பம் நீடிக்கிறது.
மாணவன் குட்டை பகுதிக்கு சென்றது ஏன்? மாணவனுடன் வந்த நண்பர்கள் சென்றது 6 பேர் திரும்பியது 5 பேர் சிசிடிவி ஆதாரத்தையே பிரதானமாக வைத்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனை சில நாட்களுக்கு முன்பாக மிரட்டிய இளைஞர்களையும், மாணவியின் தந்தையையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்செல்வனின் தாயார் யோகலெட்சுமி கோரிக்கை வைத்து வருகிறார்.
முட்புதருக்குள் உள்ள குட்டைக்குள் மாணவன் சென்ற காரணம் என்ன?
சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் ஆடைகள், காலணி எங்கே?
மாணவனின் உடலை மீட்கும் போது இல்லாத டீ சர்ட் போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் வந்தது எப்படி?
என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இந்நிலையில் 9ஆவது நாளாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
போராட்டம் காரணமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN