தங்கக் கவசத்தில் அருள்பாலித்த மணக்குள விநாயகர் - நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
புதுச்சேரி, 14 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரியில் உலகப் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் கோவிலில் மூலவர் விநாயகருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வ
Temple


புதுச்சேரி, 14 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரியில் உலகப் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் கோவிலில் மூலவர் விநாயகருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். அந்த வகையில், இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் உற்சவர் விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர்.

இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், தங்கக் கவசத்தில் அருள்பாலித்த விநாயகரை பக்தியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், தனிநபர் அர்ச்சனைகள் மற்றும் விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்து செல்லவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ