சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய அரசு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 14 செப்டம்பர் (ஹி.ச.) பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், உண்மையான ஓபிசி எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்ட சதியில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் எம
மாணிக்கம் தாகூர்


தமிழ்நாடு, 14 செப்டம்பர் (ஹி.ச.)

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், உண்மையான ஓபிசி எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்ட சதியில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும் நிலையில், ஓபிசி சாதி விவரங்களை மட்டும் முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல் பொதுவான முறையில் சேகரிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசின் பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட ஓபிசி சாதிகள் உள்ள நிலையில், துல்லியமான பட்டியலை வழங்காமல் பொதுவான கேள்வியாக வைப்பது மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் என விமர்சித்துள்ளார்.

34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் பணியில் முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல் தவறுகளை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என்றும், சிறிய எழுத்துப் பிழைகூட ஒரு சமூகத்தை வேறு சமூகப் பிரிவாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது நிர்வாகக் குளறுபடி மட்டுமல்ல என்றும், உண்மையான ஓபிசி எண்ணிக்கையை குறைத்துக்காட்டி எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டை பாதிக்கும் நடவடிக்கையாக அமையக்கூடும் என்றும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரமற்றவர்களாக வைத்திருப்பதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்றும், சமூக நீதிக்கு எதிரான அஜெண்டாவை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam