லண்டன் பயணத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பு எங்கே? – நாராயணன் திருப்பதி கேள்வி
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது பயணத்தின் 5-வது நாளான இன்று வரை முதலீட்டாளர்களை சந்திக்கும் எந்தவொரு நிகழ்வும் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என பா
நாராயணன் திருப்பதி


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது பயணத்தின் 5-வது நாளான இன்று வரை முதலீட்டாளர்களை சந்திக்கும் எந்தவொரு நிகழ்வும் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முதலமைச்சரின் லண்டன் பயணம் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தய நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றது தொடர்பான காட்சிகள் மட்டுமே பொதுவெளியில் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான அந்த நிகழ்ச்சியின் காட்சிகளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நடிகை திரிஷா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்ததாகவும், முதலீட்டாளர்கள் யாரும் பங்கேற்றதாகத் தெரியவில்லை என்றும் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 7 நாட்கள் கொண்ட லண்டன் சுற்றுப்பயணத்தில் 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை முதலமைச்சர் எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார், இன்னும் எத்தனை முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீதமுள்ள 2 நாட்களில் எந்தெந்த முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார்? எத்தனை முதலீடுகளை ஈர்க்க உள்ளார்? இதுவரை எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ள நாராயணன் திருப்பதி, இரண்டு நாட்களில் முதலீடுகளை முதல்வர் ஈர்ப்பாரா? என விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P