Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,
ஏற்கனவே ராஜினாமா செய்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து சட்ட விதிகளின்படி பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், தனது பதவியில் இருந்து எந்தவிதமான அழுத்தத்திற்கும் அடிபணிந்து முடிவெடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “துண்டுச் சீட்டுக்கும், துண்டுக்கும் அடிபணிய மாட்டேன்; அடிபணியவில்லை” என கூறினார்.
கடந்த சில மாதங்களாக நான்கு முன்னாள் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கட்சித் தாவல் விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுராந்தகம்i தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க. தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நான்கு பேரிடமும் சபாநாயகர் ஏற்கனவே விளக்கம் கோரியிருந்தார். பின்னர் கூடுதல் விளக்கங்களையும் அளிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களும் தனது பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பான சபாநாயகரின் முடிவு, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடைத்தேர்தல் சூழலுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam