கட்டணக் கொள்ளையைத் தடுக்க தனியார் பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் – சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி, 14 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்ததை வரவேற்பதாக ல
Jose


புதுச்சேரி, 14 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்ததை வரவேற்பதாக லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

630 பேருந்துகளுக்கு ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இதில் தமிழக அரசுக்கு பேருந்து நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணத் தொகை ரூ.27 லட்சத்து 58 ஆயிரத்து 243 ஆகும். இதைக் கழித்துப் பார்த்தால் உண்மையில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 630 பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கணக்கிட்டால், ஒரு பேருந்துக்கு சராசரியாக ரூ.506 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் சார்லஸ் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ரூ.500 மதிப்புள்ள பயணச்சீட்டு ரூ.1,500-க்கும், ரூ.1,000 மதிப்புள்ள பயணச்சீட்டு ரூ.3,000-க்கும் விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து சுரண்டிய பேருந்துகளுக்கு இவ்வளவு குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரூ.500 அளவிலான அபராதம் விதிப்பதால் மட்டுமே இனி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என எப்படி உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தை அரசு ஏற்று நடத்துவது போன்று, பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை கருத்தில் கொண்டு தனியார் பேருந்துகளையும் அரசே ஏற்று, குறைந்த கட்டணத்தில் இயக்குவதுதான் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்றும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P