Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் கொல்லங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அவ்வப்போது மாயமாகி வந்தன.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறுத்தையைப் பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தக் கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது.
அப்போது, சிறுத்தை நடமாட்டம் மீண்டும் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்ததையடுத்து, வனத்துறையினர் மீண்டும் கூண்டு வைத்துக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அந்தக் கூண்டில் மற்றொரு சிறுத்தை சிக்கியது.
பிடிபட்ட சிறுத்தையை நெல்லியாம்பதி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவித்தால் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வனத்துறையினர் கருதியுள்ளனர். இதையடுத்து, சிறுத்தையை பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்த நிலையில், 2 மாதங்களில் 2 சிறுத்தைகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P